

டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்.
சென்னை: டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோரை தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக பொறுப்பு ஆளுநராக கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த கேரள ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அக்.13-ம் தேதி தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் அக்.16-ம் தேதி முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக முழுநேர ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு அர்லேகர் டெல்லி சென்று கடந்த 2 நாட்களாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். நேற்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிரதமர் உடனான ஆளுநரின் சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சந்தித்தார். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் நலன், மேம்பாடு குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். தனக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்கு மற்றும் மதிப்புமிகு கலந்துரையாடலுக்காக பிரதமருக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.