

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
புதுடெல்லி: மக்களின் தீர்ப்பையும், ஜனநாயகத்தையும் அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ-வில் கலந்துள்ளது என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோவில், “தோல்வியின் போது மக்களின் தீர்ப்பை அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். இந்திய நாட்டின் ஜனநாயகம் மிகவும் வலுவானது. உலக அளவில் சிறந்த உதாரணமாக உள்ளது.
ஆனால், ஜனநாயகத்தை அவமதிப்பது, தோல்வியின் போது தேர்தல் ஆணையத்துக்கு களங்கம் விளைவிப்பது, மக்களின் தீர்ப்பை அவமதிப்பது ஆகியவை காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ-வில் கலந்துள்ளது.
ராகுல் காந்தியின் கட்டளையை ஏற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அது அரசியலமைப்பை வலுவிழக்க செய்யும் வகையில் உள்ளது. ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், தேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் அவரது பேச்சு உள்ளது.
இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையம் சரி என்றும், தோல்வி கண்டால் அதே தேர்தல் ஆணையத்தின் மீது குறை கூறுவதும் அவர்களின் வழக்கம். அப்படியென்றால் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் எப்படி வெற்றி பெற்றார்கள்?
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி கடந்த 80 மற்றும் 90-களில் வாக்குச்சாவடியை கைப்பற்றிய காலத்துக்கு நாட்டினை பின்னோக்கி கொண்டு செல்லப் பார்க்கிறது. வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெற தொழில்நுட்பம் உதவுகிறது. அப்படி இருக்கும் நிலையில் அதை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?
ஜனநாயகத்தை வலுவிழக்க செய்யும் செயலை அவர்கள் ஏதோ இன்று மட்டும் செய்யவில்லை. கடந்த காலத்தில் தேசத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்து அதை அவர்கள் அரங்கேற்றினார்கள்.
சட்டப்படி தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமர் மட்டுமே தன்னிச்சையாக தேர்தல் ஆணையரை நியமிக்கும் நிலை இருந்தது. அரசமைப்பு நிறுவனங்களை வலுவிழக்க செய்யும் ஆபத்தான விளையாட்டை காங்கிரஸ் விளையாடுகிறது. அவர்களின் தீய நோக்கத்துக்கும், செயலுக்கும் எதிராக மக்கள் வாக்களிப்பார்கள். அவர்களால் ஒருபோதும் வெல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் கலபுரகியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அனைத்துத் தேர்தல்களும் சட்டவிரோதமானவை. எனவே, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டும். வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தி இருந்தார்.
முன்னதாக, தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கு எதிராக தங்கள் ஆட்சேபனையை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி தெரிவித்ததாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது. இருப்பினும் இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் தந்தது.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டியும், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராகவும் இண்டியா கூட்டணி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதை வலியுறுத்தும் வகையில் வரும் 6-ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அனைத்துத் தேர்தல்களும் சட்டவிரோதமானவை என தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களைக் கலைக்க வேண்டும் என்று நேற்று (அக்.3) வலியுறுத்தினார். வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.