

பெண்களின் முன்னேற்றத்துக்காக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பெண்கள் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் சூழலில் இருந்து விடுவித்து, அவர்களை உரிமையாளர்களாக மாற்றும் வகையில் ‘ஷி மார்ட்’ திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், பெண்கள் சில்லறை வியாபாரக் கடைகளை தொடங்கலாம். இது பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு வட்டியில்லாமல் கடன் கொடுக்கும், லக்பதி தீதி திட்டம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.
இத்திட்டம் பெரிய சந்தைகளை பெண்கள் அடைவதற்கும், அவர்கள் தங்களது சொந்த தயாரிப்புகளை ‘பிராண்ட்’ செய்வதற்கும், நிரந்தர வருவாய்க்கும் வழிவகுக்கும். மேலும், சுய உதவிக் குழுக்கள் மூலம் உள்ளூர் பொருட்கள் வலிமை பெறும். இந்த ஷி மார்ட் கடைகள் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் பெரிய பிராண்ட்களுடன் போட்டி போட முடியும். இதுபோன்ற மிகப்பெரிய திட்டத்துக்கு வங்கிக் கடன் மட்டுமே போதுமானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு புதுமையானதாகவும், மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்க கூடிய வகையில் இந்த நிதியுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் நாட்டில் உள்ள பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், தனியார் முதலீடுகளுக்கு நேரடியாக பலன்தரும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.