ராணுவ நவீனமயமாக்கலுக்கான ரூ.2.19 லட்சம் கோடி உட்பட பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
ராணுவ நவீனமயமாக்கலுக்கான ரூ.2.19 லட்சம் கோடி உட்பட பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

புதுடெல்லி: 2026-27-க்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.7.85 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் ஒதுக்கீடான ரூ.6.81 லட்சம் கோடியை காட்டிலும் கணிசமான உயர்வாகும். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2026-27 நிதியாண்டிற்கான பாதுகாப்புத் துறை செலவினம் ரூ.7,84,678 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இது ரூ.6,81,210 கோடியாக இருந்தது.

பாதுகாப்பு துறைக்கான மொத்த ஒதுக்கீட்டில், நவீன மயமாக்கல் உட்பட மூலதன செலவினங்களுக்காக மட்டும் ரூ.2,19,306 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் செலவினங்களுக்கான ஒதுக்கீடு ரூ.5,53,668 கோடியாக உள்ளது. இதில் ஓய்வூதியத்துக்கான ஒதுக்கீடான ரூ.1,71,338 கோடியும் அடங்கும்.

நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம்: ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2.19 லட்சம் கோடியில் விமானங்கள் மற்றும் என்ஜின்கள் வாங்க ரூ.63,733 கோடியும், கடற்படை விரிவாக்கத்துக்காக ரூ.25,023 கோடியும் செலவிடப்பட உள்ளன.

ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ட்ரோன்கள் வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் பட்ஜெட்டில் இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

சுங்க வரி விலக்கு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்: அதன்படி, சிவில் மற்றும் பயிற்சி விமானங்கள் தயாரிப்புக்கு தேவையான பாகங்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள், விமான உதிரிபாகங்களைப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களுக்கும் அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை உற்பத்திக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ நவீனமயமாக்கலுக்கான ரூ.2.19 லட்சம் கோடி உட்பட பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு
பங்குகள் விலக்கல் மூலம் ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in