புதினுக்கு முர்மு அளித்த விருந்து: சசி தரூருக்கு அழைப்பு; ராகுலுக்கு அழைப்பு இல்லை!

விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முர்மு, புதின், சி.பி. ராதாகிருஷ்ணன், மோடி உள்ளிட்டோர்

விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முர்மு, புதின், சி.பி. ராதாகிருஷ்ணன், மோடி உள்ளிட்டோர்

Updated on
1 min read

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்றிரவு அளித்த விருந்துக்கு சசி தரூர் அழைக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் புதுடெல்லி வந்தார். பிரதமர் மோடி அவரை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். இதையடுத்து, பிரதமர் மோடியும் அதிபர் புடினும் நேற்று முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா வந்த புதினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு விருந்தளித்தார். இந்த விருந்தில், குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள், ரஷ்ய தூதுக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் இதில் கலந்து கொண்டார்.

எனினும், இந்த முக்கிய விருந்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியோ, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவோ அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அதிபர் புதினின் வருகையை ஒட்டி இன்று இரவு நடைபெறும் அதிகாரப்பூர்வ விருந்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் அழைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. இருவருமே அழைக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதினை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்க அனுமதிக்காததற்காக ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். “பொதுவாக, இந்தியாவுக்கு யார் வந்தாலும் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவருடன் ஒரு சந்திப்பை நடத்துவது வழக்கம். வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலும் இது நடந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை.

நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதுகூட, அந்நாட்டுத் தலைவர்கள் என்னைச் சந்திப்பதைத் தவிர்க்க அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் இரண்டாவது கண்ணோட்டத்தை வழங்குபவர். நாங்களும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். ஆனால், நாங்கள் வெளிநாட்டு பிரமுகர்களைச் சந்திப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. பாதுகாப்பின்மை காரணமாக பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சகமும் இப்போது முந்தைய நடைமுறையைப் பின்பற்றுவதில்லை.” என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முர்மு, புதின், சி.பி. ராதாகிருஷ்ணன், மோடி உள்ளிட்டோர்</p></div>
கூடங்குளம் அணுமின் திட்டம்: டெல்லியில் ரஷ்ய அதிபர் புதின் கூறியது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in