கூடங்குளம் அணுமின் திட்டம்: டெல்லியில் ரஷ்ய அதிபர் புதின் கூறியது என்ன?

கூடங்குளம் அணுமின் திட்டம்: டெல்லியில் ரஷ்ய அதிபர் புதின் கூறியது என்ன?
Updated on
1 min read

புதுடெல்லி: “கூடங்குளத்தில் ஏற்கெனவே 2 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ள நிலையில், திட்டமிட்டபடி மொத்தம் 6 அணு உலைகளை அமைப்பதில் இந்தியாவுக்கு உதவ ரஷ்யா உறுதிபூண்டுள்ளது” என டெல்லியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று காலை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய விளாடிமிர் புதின், "இந்தியாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்துக்கான உறுதுணையை நாங்கள் வழங்கி வருகிறோம். 6 அணு உலைகளில் இரண்டு ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. மேலும், நான்கு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு உதவுவதில் ரஷ்யா உறுதியுடன் உள்ளது.

இந்த அணுமின் நிலையத்தை முழு அளவிலான மின் உற்பத்திக்குக் கொண்டு வருவதன் மூலம் அது இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். சிறிய அணு உலைகள் மற்றும் மிதக்கும் அணுமின் நிலையங்களை நிர்மானிப்பது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதிய சர்வதேச தளவாட வழித்தடங்களை உருவாக்க ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளை அமைப்பதற்கான எரிபொருள் விநியோக ஒப்பந்தம் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நீண்ட கால அடிப்படையில் யுரேனியம் எரிபொருளை ரஷ்யா வழங்கி வருகிறது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது அணு உலைக்கான அணு எரிபொருளின் முதல் தொகுதியை இன்று அனுப்பி இருப்பதாக ரஷ்ய அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் தெரிவித்திருந்தது. முழுமையான விநியோகத்துக்கு ரஷ்யாவில் இருந்து ஏழு விமானங்கள் இயக்கப்பட வேண்டியது இருக்கும் என ரோசாட்டம் தெரிவித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் திட்டம்: டெல்லியில் ரஷ்ய அதிபர் புதின் கூறியது என்ன?
“இந்தியாவுக்கு தடையில்லா எரிபொருள் ஏற்றுமதியை ரஷ்யா தொடரும்” - டெல்லியில் புதின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in