

சரத் பவார்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியுடன் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1999ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) தொடங்கினார். 2023ல் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் அக்கட்சியை உடைத்து பெரும்பாலான எம்எல்ஏ-க்களுடன் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்தார்.
இதையடுத்து, சரத் பவார் மற்றும் அஜித் பவார் ஆகிய இருவரின் தலைமையில் 2 அணிகளாக என்சிபி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அஜித் பவார் சமீபத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி சுனேத்ரா பவார் என்சிபி (அஜித் பவார்) தலைவராக உள்ளார்.
இந்த சூழலில், சரத் பவார் தலைமையிலான என்சிபியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது குறித்து டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மகாராஷ்டிர முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் வடேட்டிவார் கூறும்போது,"காங்கிரஸ் கட்சியுடன் என்சிபியை இணைப்பது குறித்து எங்கள் கட்சி மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் மதச்சார்பற்ற கொள்கைகளை ஏற்கும் எவரும் எங்கள் கட்சிக்கு எப்போதும் வரவேற்கத்தக்கவர்கள்" என்றார்.
அதே நேரம் கட்சியில் உள்ள ஒரு பிரிவினர் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரே போன்ற பிராந்தியத் தலைவர்கள் சமீபத்தில் சந்தித்த அரசியல் பின்னடைவுகளுக்கு மத்தியில் இந்த இணைப்புப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.