

பத்ருதீன் அஜ்மல் | ஹுமாயூன் | ஒவைசி |
புதுடெல்லி: அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் 30% முதல் 35% வரை உள்ளனர். கணிசமான தொகுதிகளின் வெற்றியை இவர்கள் தீர்மானிக்கிறார்கள். எனினும் முஸ்லிம் அரசியல் செய்யும் கட்சிகளை இம்மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள் இம்முறை முழுமையாக நம்பவில்லை.
இதன் விளைவாக, அசாமில் ஏஐயுடிஎப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் படுதோல்வி அடைந்தார். கடந்த தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற இவருக்கு இம்முறை 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அசாமில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், 20 முஸ்லிம்களை வேட்பாளர்களாக்கியது. இவர்களில் 18 பேர் வெற்றி பெற்றனர். முஸ்லிம் அல்லாத 79 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் சுமார் 30% உள்ளனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முஸ்லிம்கள் பங்கு அதிகம். இங்குள்ள முர்ஷிதாபாத்தில் பாபர் பெயரில் மசூதி கட்டுவதாக அறிவித்தவர் ஹுமாயூன் கபீர். இதனால், டிஎம்சியில்இருந்து நீக்கப்பட்ட இவர் புதிய கட்சி தொடங்கினார். ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார்.
எனினும் ஹுமாயூன் பாஜகவுடன் ரூ.1,000 கோடி பேரம் பேசுவதுபோல் ஒரு காட்சிப் பதிவு வெளியானதை தொடர்ந்து இவருடனான கூட்டணியை ஒவைசி ரத்து செய்து தனித்துப் போட்டியிட்டார். இந்நிலையில் ஹுமாயூன் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளைத் தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளில் தோல்வி அடைந்துள்ளார். ஒவைசியின் கட்சியும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
ஹுமாயூன், ஒவைசி ஆகிய இருவரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் வாக்குகளைப் பிரித்துள்ளனர். மற்றொரு முஸ்லிம் தலைவரான பீர் ஜாதா அப்பாஸ் சித்திக்கீயும் முஸ்லிம் வாக்குகளைப் பிரித்துள்ளார்.
இந்தமுறை டிஎம்சியுடன் இடது சாரி மற்றும் காங்கிரஸுக்கும் முஸ்லிம்கள் வாக்குகளைப் பிரித்தளித்து விட்டனர். காங்கிரஸுக்கு கிடைத்த 2 தொகுதிகளில் வென்ற இருவருமே முஸ்லிம்கள்.
இதன் காரணமாக, முஸ்லிம் அரசியலை கடுமையாக எதிர்த்த பாஜகவுக்கு அசாமில் தொடர் வெற்றியும், மேற்கு வங்கத்தில் முதல்முறை வெற்றியும் கிடைத்துள்ளது. அசாமில் பத்ருத்தீன் அஜ்மலும், மேற்கு வங்கத்தில் ஒவைசி, ஹுமாயூன் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களின் அரசியல் செல்வாக்கை பாஜக நீர்த்துப் போகச் செய்துள்ளது.