

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை வளாகத்தின் 2-வது நுழைவாயில் விஐபி.க்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பில் உள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் உத்தரபிரதேச பதிவு எண் கொண்ட ஒரு கார், இந்த நுழைவாயில் தடுப்பை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளது. முகக்கவசம் அணிந்த ஒருவர் பிறகு காரை நிறுத்திவிட்டு, நிதானமாக வெளியே வந்து அருகில் ஒரு பூங்கொத்தை வைத்துவிட்டு பிறகு மீண்டும் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவை செயலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்த நபர் சபாநாயகர் விஜேந்தர் குப்தா வின் அலுவலகத்தை நோக்கிச் சென்று, அங்குள்ள முன் மண்டபத்தின் அருகில் ஒரு பூங்கொத்தை வைத்தார். மேலும் சபாநாயகரின் கார் மீது மை வீசினார்" என்றார்.
பெரும் பாதுகாப்பு மீறலாக கருதப்படும் இந்த சம்பவத்தை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த நபர் கொண்டுவந்த பூங்கொத்தில் வெடிபொருள் அல்லது சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தி அந்த காரின் ஓட்டுநர் மற்றும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.