

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு 30 நாள் காவலில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசியல் எதிரிகளை தொந்தரவு செய்யும் மசோதா என கூறி இதற்கு எதிர்க்கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இது நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பாஜகவினர். இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக, மோசமான குற்றங்களில் சிக்கும் அமைச்சர்களை பதவி நீக்கும் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் ஒருவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிருபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவராக கருதப்படுகிறார்.
மோடி ஆட்சியில் விசாரணை அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். இதை நாங்கள் எதிர்ப்போம். நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தில் ஏற்கெனவே தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதாவை குளிர்கால கூட்டத்தில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கலாம். அதையும் நாங்கள் எதிர்ப்போம்" என்றார்.