

புதுடெல்லி: இந்தூரில் நடைபெற்ற மாணவர்கள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாய் பற்றிய ராகுல் காந்தியின் விமர்சனங்கள் தரக்குறைவானவை என பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாணவர்களின் முழக்கம் (சத்ரோன் கி கூஞ்ச்) என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் புல்கிட் மணியும் பங்கேற்றார். மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி தொடர்பான வீடியோ காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது.
அந்த வீடியோவில், புல்கிட் மணி மேடையில் ராகுல் காந்தியுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்துவதும், பிரதமர் நரேந்திர மோடியைப் போல பாவனை செய்வதும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் மறைந்த தாயார் குறித்தும் அதில் சில விமர்சனங்கள் வெளியிட்டதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மோடி தலைமையிலான அரசின் தூதரக அணுகுமுறையை விமர்சித்த ராகுல் காந்தி, பிரதமரின் குரலைப்போல நகைச்சுவையாகப் பேசி கேலி செய்ததாகவும் பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன், “பிரதமரின் தாயைக் கேலி செய்வதன் மூலம் ராகுல் காந்தி பெண்களை அவமதித்துள்ளார். எந்தவொரு நாகரிகமான, நல்லெண்ணம் கொண்ட நபருக்கும் இந்த அநாகரிகமான, மட்டமான செயல்கள் வேடிக்கையாக இருக்காது. ஆனால் ராகுல் ஒரு நகைச்சுவை கலைஞருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டு சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார். ராகுல் ஆதரிக்கும் இத்தகைய நாகரீகமற்ற கலாச்சாரம்தான் அவரும் காங்கிரஸும் இளைஞர்களிடம் எடுபடாமல் போனதற்குக் காரணம்” என்று கூறியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி், “ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தார்மீக ரீதியாக அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டனர். பிரதமர் மோடியின் மறைந்த தாயாரை் அவமதித்துள்ளதன்மூலம் அடிப்படை மனிதநேயமும் அரசியல் நாகரிகமும் அவர்களிடம் துளியும் இல்லை என்பது தெளிவாகிறது” என்று கூறியுள்ளார்.