“உத்தவ் சிவசேனா கட்சியை காங்கிரஸில் இணைக்க முயற்சி” - ஓம் பிர்லாவிடம் அதிருப்தி எம்.பி.க்கள் தகவல்

“உத்தவ் சிவசேனா கட்சியை காங்கிரஸில் இணைக்க முயற்சி” - ஓம் பிர்லாவிடம் அதிருப்தி எம்.பி.க்கள் தகவல்
Updated on
2 min read

புதுடெல்லி: சிவசேனா (யுபிடி) கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க முயற்சிகள் நடப்பதாகவும், அதன் காரணமாகவே தாங்கள் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் அக்கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்துள்ளனர்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த 6 எம்பிக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைய உள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியது.

இதையடுத்து, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில், கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இதில் மக்களவை எம்பிக்கள் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கட்சியின் ஒரே மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் இந்த கூட்டதில் கலந்து கொண்டார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “இன்று நடைபெற்ற கூட்டத்தில், அரவிந்த் சாவந்த், ராஜாபாவ் வாஜே, அனில் தேசாய் ஆகிய மூன்று மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நான் மாநிலங்களவை உறுப்பினர். கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினர்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறியுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்” என தெரிவித்தார்.

இந்நிலையில், அதிருப்தி எம்பிக்கள் ஆறு பேரும் ஏற்கெனவே சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து தாங்கள் சிவசேனா (யுபிடி) கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைய உள்ளது தொடர்பாக கடிதம் கொடுத்துள்ளனர்.

நாகேஷ் ஆஸ்திகர், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம் பிரகாஷ் ராஜேநிம்பல்கர், பாவ்சாகேப் வக் சவ்ரே ஆகிய 6 எம்பிக்களும் ஓம் பிர்லாவிடம் கொடுத்த கடிதத்தில், “சிவசேனா (யுபிடி) தனது கொள்கையில் இருந்து விலகி விட்டது. காங்கிரஸ் கட்சியில் சிவசேனா (யுபிடி)யை இணைக்க உத்தவ் தாக்கரே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த இணைப்பு முயற்சியே, நாங்கள் கட்சியைவிட்டு வெளியேற காரணம்.

உத்தவ் தாக்கரே மீது தொண்டர்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அவரை எங்கள் தொகுதி நிகழ்ச்சிகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால், எங்கள் அழைப்புகளை அவர் புறக்கணித்தார். தேர்தல் காலங்களில்கூட அவரிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரது மகன் ஆதித்ய தாக்கரேவைக்கூட அணுக முடிவதில்லை. நாடாளுமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியினர் அமர்ந்திருக்கும் இடங்களுக்கு அருகிலேயே எங்களுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

அடுத்து என்ன?

அதிருப்தி எம்பிக்கள் ஆறு பேரும் சனிக்கிழமை அன்று ஏக்நாத் ஷிண்டைவைச் சந்திப்பார்கள். அதன் பிறகு ஓம் பிர்லாவுடன் நடந்த சந்திப்பு குறித்த விவரங்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சபாநாயகரிடம் வழங்கிய கடிதத்தை வெளியிடுவதோடு, தாங்கள் வெளியேறியதற்கான காரணம் குறித்தும் செய்தியாளர்களிடம் விளக்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

“உத்தவ் சிவசேனா கட்சியை காங்கிரஸில் இணைக்க முயற்சி” - ஓம் பிர்லாவிடம் அதிருப்தி எம்.பி.க்கள் தகவல்
கல்வி சீர்திருத்தத்துக்கான இயக்கம் - மாணவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in