புதுடெல்லி: கல்வி சீர்திருத்தத்துக்கான இயக்கத்தைத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, அதில் இணையுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள், நீட் வினாத்தாள் கசிவுப் பிரச்சினைகளுக்கு எதிராக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் கோடா நகரில் நேற்று (ஜூன் 17) தனது நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, அலகாபாத் (ஜூலை 10), பாட்னா (ஜூலை 10), டெல்லி (ஜூலை 14) ஆகிய இடங்களிலும் மாணவர் மாநாடுகளை அவர் நடத்த உள்ளார்.
இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வினாத்தாள் கசிவு, தேர்வு தொடர்பான சிக்கல்கள், அதிக கட்டணம் ஆகியவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்... இந்த கல்வி அமைப்பு உங்கள் கனவுகளைச் சிதைத்திருந்தால்... உங்கள் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை உங்கள் கல்விக்காகச் செலவிட்டிருந்தால்... மாணவர்களுக்கான குரல் என்ற இந்த இயக்கம் உங்களுக்கானதுதான்.
இது வெறும் பிரச்சாரம் மட்டுமல்ல. உங்கள் கோரிக்கைகளை நேரடியாக அரசாங்கத்திடம் கொண்டு செல்வதற்கான ஒரு தளம். குறைந்த செலவில் கல்வி, நியாயமான தேர்வுகள், கண்ணியமான வேலைவாய்ப்பு ஆகியவற்றை நீங்கள் பெற இந்த இயக்கத்தில் இணையுங்கள். இதில், நீங்கள் இணைவதன் மூலம் இந்த இயக்கம் வலுப்பெறும்; மாணவர்களின் குரலும் வலுப்பெறும்” என தெரிவித்துள்ளார். இதற்காக, https://rahulgandhi.in/chhatron-ki-goonj என்ற இணையதளத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.