பெங்களூரு: கர்நாடக வளர்ச்சித் திட்ட கூட்டத்தின்போது பாஜக எம்எல்ஏ சித்து பாட்டீலுக்கும், காங்கிரஸ் எம்எல்சி பீம்ராவ் பாட்டீலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கர்நாடக அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே முன்னிலையில் இருவரும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் பீதரில் நேற்று வளர்ச்சி திட்ட கூட்டம் நடைபெற்றது. பீதர் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஈஸ்வரா காண்ட்ரே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஹம்னாபாத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சித்து பாட்டீல், காங்கிரஸ் எம்எல்சி பீம்ராவ் பாட்டீல், அரசு அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது ஹம்னாபாத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள வன நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக பாஜக எம்எல்ஏ சித்து பாட்டீலுக்கும், காங்கிரஸ் எம்எல்சி பீம்ராவ் பாட்டீலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, காங்கிரஸ் எம்எல்சி பீம்ராவ் பாட்டீல் தனது நாற்காலியில் இருந்து எழுந்து பாஜக எம்எல்ஏ சித்து பாட்டீலின் சட்டையை பிடித்து தாக்க முற்பட்டார். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரையும் போலீஸார் கட்டுப்படுத்தி, தனியாக அழைத்து சென்றனர்.
இதனால், அங்கு இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே கூட்டத்தை ஒத்திவைத்தார்.