

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்ததில் ஏதோ தவறு உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூரில் கடந்த செப். 27-ல் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அடங்கிய அமர்வு, கடந்த அக். 13-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று மீண்டும் நடைபெற்ற விசாரணையின் போது, தனி நீதிபதி விசாரணைதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், “கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்ததில் ஏதோ ஒரு தவறு உள்ளது.
வழக்கை சரியாக நடத்தவில்லை” என்றனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதையும், தற்செயலாக ஏற்படும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யும் மனுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது என்றும் பதில் அளித்தார்.
இதற்கு நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி, “தவறான நடைமுறையாக இருந்தால் என்னவாகும்?” என்று கேட்டார். பின்னர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும், தமிழகத்தைச் சேராதவர்கள் குழுவில் இருப்பார்கள் என்றும் உத்தரவிட்டதை மாற்றம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய விசாரணையை நிறுத்திவைத்த உத்தரவையும் மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “தமிழகத்தைச் சேராத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை கண்காணிப்புக் குழுவில் இடம்பெறச் செய்ததற்கு, அனைத்தும் நியாயமாக இருக்க வேண்டும் என்று கருதியதே காரணம்” என்று விளக்கம் அளித்தனர். மேலும், கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை பிப். 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.