தருண் தேஜ்பால் 2 வாரங்களுக்குள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

தருண் தேஜ்பால் 2 வாரங்களுக்குள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளை கடந்த 6ம் தேதி, தெஹல்கா இதழின் நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தருண் தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதேநேரத்தில், தேஜ்பாலுக்கான தண்டனையை அதிகரிக்கக் கோரி கோவா அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உச்ச நீதிமன்ற விதிகளின்படி ஒரு குற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நபர் சரணடைய வேண்டும். சரணடைந்ததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இது விதி. மாறாக, மேல்முறையீட்டு மனுவுடன் சரணடைவதில் இருந்து விலக்கு கோரும் விண்ணப்பத்தையும் தாக்கல் செய்யலாம். இதில் எதையும் தருண் தேஜ்பால் தரப்பு மேற்கொள்ளவில்லை” என வாதிட்டார்.

தருண் தேஜ்பால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தருண் தேஜ்பாலுக்கு எதிரான தீர்ப்புக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே, அவரை சரணடையுமாறு கோருவது பொருத்தமானதாக இருக்காது” என்றார்.

மேலும், தேஜ்பாலுக்கு விவாரணம் அளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தால், அவர் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், “தருண் தேஜ்பால் முதலில் சரணடைய வேண்டும். அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என்று உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி: 2013-ம் ஆண்டு நம்பரில் கோவாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த தெஹல்கா விழாவின்போது, அதன் நிறுவனர்களில் ஒருவரான தருண் தேஜ்பால் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் பெண் பத்திரிகையாளர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதையடுத்து, தேஜ்பால் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கை விசாரித்த கோவா செஷன்ஸ் நீதிமன்றம், தருண் தேஜ்பாலுக்கு பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய செய்திகள், பாதிக்கப்பட்டவரைப் போல அவர் இருக்கவில்லை என்பதையும், அவர் அதிர்ச்சியடையவோ அல்லது அச்சம் கொள்ளவோ இல்லை என்பதையும் நிரூபிக்கின்றன எனக் கூறி தருண் தேஜ்பாலை கடந்த 2021-ம் ஆண்டு விடுவித்தது.

இதை எதிர்த்து கோவா அரசு, மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில் மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணையின்போது, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டது.

மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று எந்தவொரு பொதுவான விதியும் இல்லை என கோவா அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

கோவா அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரு பெண் ‘வேண்டாம்’ என்றால் அதற்கு ‘வேண்டாம்’ என்றுதான் பொருள் என்ற வலுவான செய்தியை சமூகத்துக்கு உணர்த்த தருண் தேஜ்பாலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கடந்த 6ம் தேதி தனது தீர்ப்பை அளித்தது. கோவா செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து, தருண் தேஜ்பால் குற்றவாளி என அறிவித்த உயர் நீதிமன்றம், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர் சரணடைய இரண்டு வார கால அவகாசம் அளித்தது.

தருண் தேஜ்பால் 2 வாரங்களுக்குள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு
“யுபிஐ-ன் பிரம்மாண்டமும் பயனும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறது” - பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in