

பிரயாக்ராஜ்: ‘‘கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய எஸ்சி.க்களுக்கு ஜாதி அடிப்படையிலான சலுகைகளை வழங்க கூடாது. இதை உத்தர பிரதேச அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்திர சஹானி என்பவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார். அதன் பிறகு இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாக பேசி வந்துள்ளார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அதில், தன்னுடைய சொந்த நிலத்தில் இயேசு கிறிஸ்து பற்றி பிரசங்கம் செய்வதற்கு அதிகாரிகளிடம் இருந்து சஹானி அனுமதி பெற்றுள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தன் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவும், வழக்கில் இருந்து விடுவிக்கவும் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சஹானி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கிரி விசாரித்து வந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி கிரி அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
மனுதாரர் சஹானி தாக்கல் செய்த மனுவில், தான் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார். அவர் மதம் மாறுவதற்கு முன்னர் எஸ்.சி. பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருந்துள்ளார். ஒருவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டால், தானாகவே எஸ்.சி.க்களுக்கான சலுகைகளை இழந்துவிடுவார்.
எனவே, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மதத்துக்கு மாறும்போது, அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். இதை உத்தர பிரதேச அரசு உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அது அரசியலமைப்பு சட்டங்களில் மோசடி செய்வது போலாகும். அத்துடன் இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்துக்கு முரணாகிவிடும். எனவே, உ.பி. சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மை செயலர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறிஸ்தவ மதத்தில் ஜாதி முறைகள் இல்லை. அப்படி இருக்கும் போது கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பிறகு எஸ்.சி.க்கான சலுகைகளை பெறுவது மோசடியாகும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் 4 மாதங்களுக்குள் இதுபோன்ற நிகழ்வுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது