

கோப்புப்படம்
அமராவதி: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொங்கல் பண்டிகை, சங்கராந்தி பண்டிகையாக 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இதன் முதல் நாளான நேற்று போகிப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பலர் தங்களின் வீடுகளின் முன் அதிகாலையே எழுந்து பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி கொண்டாடினர்.
திருமலையிலும் திருப்பதி தேவஸ்தானத்தினர் ஏழுமலையான் கோயில் முன் விறகு, உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு போகிப்பண்டிகை கொண்டாடினர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வழிபட்டனர். பல இடங்களில் எம்பி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பொது மக்களுடன் இணைந்து போகிப்பண்டிகையை கொண்டாடினர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று காலை அவரது சொந்த ஊரான நாராவாரிபல்லியில் போகிப்பண்டிகையை தனது குடும்பத்தாருடன் கொண்டாடினார். பொங்கல் பண்டிகையையொட்டி, ஆந்திராவில் சித்தூர், திருப்பதி மாவட்டங்களில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நாளை மாட்டுப் பொங்கலை முன்னிட்டு குப்பம், திருப்பதி அடுத்துள்ள ரங்கம்பேட்டை உள்ளிட்ட பல ஊர்களில் காளைகளை அலங்கரித்து, அவற்றின் கொம்புகளில் பரிசு பொருட்களை கட்டி, வரிசையாக விரட்டி விடுவர்.
அவ்வாறு ஓடும் மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கு அதன் கொம்பில் கட்டியுள்ள பரிசு பொருட்கள் வழங்கப்படும். இதற்காக இளைஞர்கள் பெருமளவில் இப்போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
இதேபோன்று ஆந்திராவில் கோதாவரி மாவட்டங்களில் சேவல் பந்தயம் வெகு பிரபலம். குறிப்பாக இந்த சங்கராந்தி பண்டிகைக்கு பல கிராமங்களில் கூடாரங்கள் அமைத்து, அதில் சேவல் சண்டை 24 மணி நேரமும் நடைபெறுமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் 2 அல்லது 3 நாட்கள் வரை தங்கி இருந்து சேவல் சண்டையில் பெருமளவில் பந்தயங்கள் கட்டி வருகின்றனர். இந்த 4 நாட்களில் பந்தயத் தொகை பல கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.