

அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
புதுடெல்லி: “சஞ்சார் சாத்தி செயலி மூலம் யாரையும் உளவு பார்க்க முடியாது. அது நடக்கவும் வாய்ப்பில்லை.” என அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சஞ்சார் சாத்தி செயலியை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் கட்டாயமாக இடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்ப கிளம்பி உள்ளது. இந்நிலையில், ‘சஞ்சார் சாத்தி' செயலி வழியாக மக்களை உளவு பார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டும் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பரவலாக எழுந்தது.
இதனிடையே, மத்திய அரசு சஞ்சார் சாத்தியின் அம்சங்கள் குறித்தும் விளக்கியுள்ளது. மத்திய அரசு இத்தனை நன்மைகளைப் பட்டியலிட்டாலும் கூட இந்த செயலிக்கு எதிர்ப்பு பரவலாக இருக்கிறது. அதுவும் ஆப்பிள் இன்க் நிறுவனம் இந்திய அரசின் இந்த உத்தரவு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று இது குறித்து மக்களவையில் விளக்கமளித்தார். இது குறித்து அவர், “சஞ்சார் சாத்தி செயலி மூலம் யாரையும் உளவு பார்க்க முடியாது. அது நடக்கவும் வாய்ப்பில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். மக்களின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இவ்விதிகளில் தேவையான மேம்பாடுகளைச் செய்ய தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.