

பாட்னா: பிஹாரின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுக் கொண்டார். பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பிஹாரின் முதல்வராவது இதுவே முதன்முறையாகும்.
சுமார் 21 ஆண்டுகளாக் பிஹார் முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பாஜகவின் சாம்ராட் சவுத்ரி (57 வயது), இன்று பிஹார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
சாம்ராட் சவுத்ரி மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சகத்தை தன்வசம் வைத்துக் கொண்டதோடு, 29 துறைகளின் கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
உள்துறையை வைத்துக்கொள்வதன் மூலம், சட்டம் - ஒழுங்கு, காவல் துறை நிர்வாகம் மற்றும் மாநிலப் பாதுகாப்பு ஆகியவற்றின் நேரடிக் கண்காணிப்பை சவுத்ரி மேற்கொள்கிறார். வேளாண்மை, சுகாதாரம், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு உள்ளிட்டவை அவரது கூடுதல் துறைகளாகும்.
இன்று மாலை லோக் பவனில் நடந்த நிகழ்ச்சியில், பிஹார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் சாம்ராட் சவுத்ரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களான விஜய் குமார் சவுத்ரி மற்றும் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர் பிஹார் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.
துணை முதல்வர் விஜய் குமார் சவுத்ரிக்கு, உள்கட்டமைப்பு, நீர்வளம், சிறுபான்மையினர் நலன், கல்வி, உயர்கல்வி, போக்குவரத்து மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பத்து துறைகள் ஒதுக்கப்பட்டன. பிஜேந்திர பிரசாத் யாதவுக்கு எரிசக்தி மற்றும் நிதி உள்ளிட்ட எட்டுத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய முதல்வராக பொறுப்பேற்ற சாம்ராட் சவுத்ரிக்கு நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்ததோடு, புதிய நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, “பிஹார் முதல்வராகப் பதவியேற்ற சாம்ராட் சவுத்ரியின் ஆற்றல், பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு மற்றும் அடிமட்ட அனுபவம் ஆகியவை மாநிலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அவரது திறமையான தலைமையின் கீழ், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அதே வேளையில், பிஹார் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் புதிய உயரங்களைத் தொடும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்