

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக டிசம்பர் 4-ம் தேதி இந்தியா வருகிறார்.
‘ரஷ்யாவிடம் வேறு நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க கூடாது. அந்தப் பணத்தில்தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வர்த்தக வரியையும் ட்ரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், வர்த்தக வரி ஒப்பந்தம் குறித்து இந்தியா - அமெரிக்கா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டிசம்பர் 4, 5-ம் தேதிகளில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று உறுதிப்படுத்தியது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியா- ரஷ்யா இடையிலான 23-வது ஆண்டு மாநாட்டில் புதின் பங்கேற்று உரையாற்றுகிறார். அத்துடன் டிசம்பர் 5-ம் தேதி பிரதமர் மோடியுடன் நேரடியாக பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து புதின் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியா வரும் அதிபர் புதினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதினின் இந்த வருகை, இந்திய - ரஷ்யா உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.