விஜயவாடா: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி பல்வேறு மாநிலங்கள் மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதன் ஒரு பகுதியாக வன்முறையை கைவிட்டுவிட்டு சரண் அடையும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி, போதிய நிதி உதவியும் செய்யப்படுகிறது.
அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் 18 மாவோயிஸ்ட்கள் தாமாக முன்வந்து காவல்துறையில் சரணடைந்தனர். அவர்களுக்கு நேற்று விஜயவாடா டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா ரூ.75 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
இது குறித்து டிஜிபி கூறுகையில்,”கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைகளில் 18 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மத்திய குழு உறுப்பினர்கள் 3 பேரும், சிறப்பு மண்டல குழு உறுப்பினர்கள் 3 பேரும் அடங்குவர்.
இது தவிர, சிறப்பு மண்டல குழு உறுப்பினர்கள் 4 பேர் உட்பட 73 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர், ஒடிசா மாநில போலீஸ் துறையினருக்கு ஆந்திர மாநில போலீஸ் துறை உதவி செய்துள்ளது.
இதன் மூலம் 74 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். சரண் அடைந்த மாவோயிஸ்ட்கள் மற்றும் மாவோயிஸ்ட்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன'' என்றார்.