புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், சில வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் முன்புற அல்லது பின்புற நம்பர் பிளேட்டுகள் அல்லது இரண்டையும் மறைப்பது, அவற்றில் மாற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தைவிட 5 மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அபராதம், வழக்கமான சுங்கக் கட்டணத்துடன் கூடுதலாக விதிக்கப்படும். உதாரணமாக, ரூ.100 சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தவிர்க்கும் வாகன ஓட்டி, அசல் கட்டணமான ரூ.100 உடன் ரூ.500 அபராதமாகச் செலுத்த வேண்டும். இதன்படி மொத்தம் ரூ.600 செலுத்த வேண்டியிருக்கும்.
சுங்கக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் வேண்டுமென்றே வாகனத்தில் ‘ஃபாஸ்டேக்’ பொருத்தாமல் இருப்பவர்களுக்கும் இந்த அபராதம் பொருந்தும். தற்போதுள்ள சுங்கக் கட்டண விதிகளின்படி, செலுத்தப்படாத சுங்கக் கட்டணத்துக்கு வாகன ஓட்டிகளுக்கு மின்னணு அறிவிப்புகள் (இ-நோட்டீஸ்) அனுப்பப்படும்.
இந்த அறிவிப்பு வழங்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தினால், அசல் சுங்கக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். 72 மணி நேரத்தைக் கடந்துவிட்டால், செலுத்த வேண்டிய தொகை இரட்டிப்பாகும்.