

புதுடெல்லி: நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு காரணம் புரளியே என அகில இந்திய சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்திரபிரகாஷ் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினையில் அவரை டெல்லியில் சந்தித்த போது ‘இந்து தமிழ் திசை’ இணையத்துக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
குடியிருப்புகள் (டொமஸ்டிக்) இணைப்புகளுக்கு எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினையாகி விட்டதே?
இது புரளி செய்திகளால் செயற்கையாக உருவானப் பிரச்சினை. உண்மையில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு என்பது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை. கடந்த மாதம் 28-ல் அமெரிக்கா-ஈரான் போர் துவங்கியப் பின்பும் வழக்கமான எண்ணிக்கையில் பிரச்சினையின்றி விநியோகம் தொடர்ந்தது. இது, புரளி மற்றும் தவறானச் செய்திகளின் காரணமாக செயற்கையாக உருவாகி விட்டது. இதற்கு சிலிண்டர் தட்டுப்பாடு காரணம் அல்ல.
வணிக ரீதியான (கமர்ஷியல்) சிலிண்டர்கள் தட்டுப்பாடு உண்மை தானே?
நாடு முழுவதும் 25,000 விநியோகஸ்தர்கள் உள்ளனர். இதன் இணைப்புகள் குடியிருப்புகளுக்கான எண்ணிக்கை சுமார் 22 கோடி, அரசு மானியத்துடனான உஜ்வாலா இணைப்புகள் சுமார் 11 கோடி. இது, தமிழகத்தில் 960 விநியோகஸ்தர்களுடன் சுமார் 9 லட்சம் இணைப்புகள். ஆனால், கமர்ஷியல் எண்ணிக்கை எவரிடமும் இல்லை.
இதன் எண்ணிக்கையை நாம் கடந்த 8 வருடங்களாக அதன் நிறுவனங்களிடம் கேட்கிறோம். இதற்கு கமர்ஷியல் இணைப்புகளில் தொடரும் தவறுகள் காரணம். இதை அரசு தலையிட்டு சரி செய்வது அவசியம். இதில் நடைபெறும் தவறுகளால் தான் கமர்ஷியல் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு.
நீங்கள் சொல்வது உண்மை எனில், குடியிருப்புகளின் காலி சிலிண்டர் புக் செய்வதற்கான நாட்களை 21-லிருந்து 25 நாட்களுக்கு என அரசு நீட்டித்தது ஏன்?
புரளியின் காரணமாக தங்கள் வீட்டில் சும்மா கிடந்த எல்பிஜி இணைப்புகளின் சிலிண்டர்களையும் பலர் புக் செய்யத் துவங்கி விட்டனர். இதனால், வழக்கத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் சிலிண்டர்கள் விநியோகம் அவசியமாகிவிட்டது.
வழக்கமான குறிப்பிட்ட தேவைக்கு ஏற்றவாறுதான் எல்பிஜி நிறுவனங்களும் தம் விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர்களை விநியோகித்து வந்தனர். எந்த பொருளாக இருப்பினும் வழக்கத்திற்கு மாறாக அதன் தேவை கூடினால் அப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுவது இயற்கை தானே.
கேஒய்சி முறையின் மூலம், எல்பிஜி இணைப்புகள் சரி பார்க்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் குடியிருப்புகளில் பயன்பாடற்ற இணைப்புகள் தொடர்வது எப்படி?
ஒரு குடியிருப்பின் உடன் பிறந்தவர்கள் உள்ளிட்டோருடன் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் எல்பிஜி இணைப்பை வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே சமையலறையில் ஒரு சிலிண்டர்தான் பயன்பாட்டில் உள்ளது.
இந்தவகையில், பல நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாதவற்றை புரளியின் காரணமாக நிரப்பி வைத்துக் கொள்ள வாடிக்கையாளர்கள் விரும்பியதும் ஒரு முக்கியப் பிரச்சினை. இப்பிரச்சனைகளைத் தடுக்க, குறிப்பிட்ட காலத்திற்கு சிலிண்டர்கள் புக் செய்யாத இணைப்புகள் ரத்து செய்யப்பட வேண்டும். இவற்றில் நியாயமான காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் முறையும் அமலாவது அவசியம்.
காலி சிலிண்டர்கள் பதிவிற்கான தொலைபேசி எண் முடங்கியது ஏன்?
வழக்கத்துக்கும் அதிகமான அழைப்புகளால் அவற்றின் சர்வர்கள் முடங்கின. இதில், இன்டேன் அதிக பாதிப்பிற்கு உள்ளானது. இதற்காக நேரில் சென்று பதிவு செய்யும் முறையையும் விநியோகஸ்தர்கள் துவக்கி விட்டனர். இந்தியன் ஆயில் ஒன் எனும் கைப்பேசி செயலியும் தடையின்றி செயல்படுகிறது.
போர் துவங்கிய பின் எல்பிஜி விநியோகத்தில் ஏற்பட்ட தாக்கம் என்ன?
உண்மையில் போர் துவங்கிய பின் எல்பிஜி உற்பத்தி 28 சதவிகிதம் கூடி உள்ளது. மார்ச் 1-ம் தேதிக்கு பிறகுதான் வளைகுடா நாடுகளிலிருந்து வந்துகொண்டிருந்த சுமார் 25 சதவிகித எரிவாயு தடைபட்டது.
ஏற்கெனவே இருந்த கையிருப்பு காரணமாக இந்த தடையால் பெரிய பாதிப்பில்லை. நேற்று வந்த இரண்டு கப்பல்களிலும் 20,000 மெட்ரிக் டன் எரிவாயுக்கானவை. இன்னும் ஒரு கப்பல் எரிவாயுவுடன் நாளை வரும் தகவல் கிடைத்துள்ளது.
நகரங்களை போல், உஜ்வாலா திட்டம், துர்கம் (மலை மற்றும் பழங்குடிகள் வாழும் பகுதி) இணைப்புகளின் சிலிண்டர் நிரப்ப 45 நாள் என புக்கிங் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், துர்கம் பகுதிவாசிகள் ஆண்டில் 4 முதல் 5 சிலிண்டர் மட்டுமே. பெறுகிறார்கள். உஜ்வாலாவில் இதை விடக் குறைவு. இந்த மாற்றங்களுக்கு பிறகு சிலிண்டர் பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.
வணிக ரீதியான சிலிண்டர்களின் நிலை என்ன?
இவற்றை பின்னுக்கு தள்ளி குடியிருப்பு விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவும், வணிகப் பயன்பாட்டின் 20 சதவிகித சிலிண்டர்கள் மட்டுமே குடியிருப்புகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
ஏனெனில் உணவு விடுதிகளில் விறகு, மின் அடுப்பு என மாற்று ஏற்பாடுகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதையும் மீறி, அதிக லாபம் பெறும் உணவு விடுதிகள் மூடப்படுவது உண்மை. இவற்றின் சிறிய பாதிப்புகள் பெரிய அளவாக செய்திகளில் காட்டப்படுகின்றன. புரளிகளுக்கு பொதுமக்கள் மதிப்பளிக்காமல் இருந்தாலே எல்பிஜி பிரச்சினை தீர்ந்து விடும்.
இந்த பிரச்சினைகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
மாநில அரசுகளுடன் இணைந்து எல்பிஜி நிறுவன செயல் இயக்குநர்களுடன் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்களால் முழுப்பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. எங்கள் கூட்டமைப்பின் சார்பில் நாட்டின் அனைத்து விநியோகஸ்தர்களும் தன் பங்கு, அரசு கொள்கை மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதைத் தீவிரமாகக் கண்காணிக்கிறோம். இதனால் நாட்டின் ஓரிரு விநியோகஸ்தர்கள் மீது மட்டுமே எடுக்கப்பட்ட நடவடிக்கை அவற்றில் விதிமீறல்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.