

ஜம்மு: ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மாநாடு கட்சி எம்எல்ஏக்கள் நடத்திய போராட்டத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று கடும் அமளி நிலவியது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கூட்டுத் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் காமேனி கொல்லப்பட்டதற்கும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசிய மாநாடு கட்சி எம்எல்ஏக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். காமேனி படத்தை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
இதற்கு பாஜக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து, எதிர் முழக்கங்களை எழுப்பினர். இது, காங்கிரஸ் எம்எல்ஏ இர்பான் ஹபீஸ் லோனே மற்றும் பாஜக எம்எல்ஏ யுத்வீர் சேதி இடையே கைகலப்புக்கு வழிவகுத்தது. இதனால் அவையில் கடும் அமளி நிலவியது. இதையடுத்து அமைதியை ஏற்படுத்த காவல் துறையினர் அவைக்குள் வந்தனர். அவை நடவடிக்கை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
ஈரானுக்கு ஆதரவான போராட்டம் குறித்து தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ தன்வீர் சாதிக் கூறுகையில், “எந்தவொரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டை தாக்க உரிமை இல்லை.இந்திய தலைவர்கள் இதை கண்டிக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக அவையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் உமர் அப்துல்லா பேசுகையில், “தங்கள் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தந்த நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது. ராணுவத் தாக்குதல்கள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது” என்றார்.