

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை வந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வருவதால் பக்தர்கள் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த 9-ம் தேதி புதன்கிழமையன்று ஏழுமலையானை மொத்தம் 69,771 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 25,888 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 4.42 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையாகி உள்ளன.
2.65 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் புதன்கிழமை மட்டுமே கோயில் உண்டியலில் ரூ.6.94 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. இதுதான் திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றிலேயே அதிகபட்ச ஒரு நாள் உண்டியல் காணிக்கை என்று கருதப்படுகிறது.
இதுவரை 3 முறை மட்டுமே ரூ.6 கோடி அளவுக்கு உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. இதில் கடந்த 9-ம் தேதி மட்டும் கிட்டத்தட்ட ரூ.7 கோடி எனும் அளவில் ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.