டெல்லியில் ‘பிரிக்ஸ்’ மாநாடு கோலாகலம்: ரஷ்ய அதிபர் புதின் - பிரதமர் மோடி பேச்சு

பாதுகாப்பு, எரிசக்தி குறித்து 45 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலைப் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். படம்: பிடிஐ

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலைப் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். படம்: பிடிஐ

Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லியில் 18-வது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, சவுதி அரேபியா ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தக் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்குகிறது. இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 11 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். மேலும் பல்வேறு நட்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

மாநாட்டை ஒட்டி டெல்லியில் மத்திய படைகள், டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க போர் விமானங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ட்ரோன் எதிர்ப்பு சாதனங்கள், ஆகாஷ் ஏவுகணைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றார். பிறகு டெல்லி மவுரியா ஓட்டலுக்கு அதிபர் புதினும் அவரது குழுவினரும் சென்றனர். இதைத் தொடர்ந்து டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ரஷ்ய அதிபர் புதினைப் பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் ஆரத் தழுவி பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் சுமார் 45 நிமிடங்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

போர் விமானங்கள்: ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ஏவுகணைகள், எஸ்.யு.57 போர் விமானங்களை வாங்குவது குறித்து தலைவர்கள் இருவரும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன. அடுத்த கட்டமாகப் பிரம்மோஸ் - என்ஜி ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து அரிய வகை கனிமங்களை வாங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டெல்லி பாரத் மண்டபத்தின் ஒரு பகுதியில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 120-க்கும் மேற்பட்ட இந்திய, ரஷ்ய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தக் கண்காட்சியைப் பார்வையிட பிரதமர் மோடியும் அதிபர் புதினும் ஒரே காரில் சென்றனர். ரஷ்ய அதிபர் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் ஆரஸ் செனட் ரகக் காரில் தலைவர்கள் இருவரும் பயணம் செய்தனர்.

பொருளாதார பாலம்: டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று மாலை ‘பிரிக்ஸ்’ தொழில் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் சராசரி பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக உள்ளது. ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக இருக்கிறது. உலக பொருளாதாரத்தில் 40 சதவீதம் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் பங்களிப்பாக உள்ளது. உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் ‘பிரிக்ஸ்’ நாடுகளில் வாழ்கின்றனர்.

எங்கள் நாட்டின் பணப் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச வணிகத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு சுதந்திரமான கடல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும். சர்வதேச வர்த்தகத்தில் பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு உள்ளன.

இந்தச் சூழலில் பொருளாதார பாலங்களை இந்தியா உருவாக்கி வருகிறது. சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளோம். உலக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா ஊக்கம் அளித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, “மேற்கத்திய நாடுகள் பலவீனம் அடைந்து வருகின்றன. உலக பொருளாதாரத்தில் அந்த நாடுகளின் பங்கு 29 சதவீதமாக மட்டுமே உள்ளது. ‘பிரிக்ஸ்’ நாடுகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

ரஷ்ய அரசின் அணு சக்தி நிறுவனமான ரோசாடாம் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸி லிகாச்சேவ் கூறுகையில், ‘‘அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக ரஷ்யா - இந்தியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாகும். மேலும் அணுசக்தி துறையில் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாகப் பிரிக்ஸ் நாடுகளில் பெரிய, சிறிய ரக அணுமின் நிலையங்களை அமைக்க ரஷ்யா உதவி செய்யும்’’ என்று தெரிவித்தார்.

புதினுக்கு திருக்குறள் நூல் பரிசு: டெல்லி பாரத் மண்டபத்தில் அதிபர் புதினைச் சந்தித்த போது, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். அப்போது மோடி கூறும்போது, “சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழ் கவிஞர் திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார். அனைத்து வாழ்க்கைநெறிகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ரஷ்ய மொழி திருக்குறளால் இரு நாடுகளின் மக்கள் இடையிலான உறவு மேம்படும். இரு நாடுகளின் உறவையும் இந்த நூல் வலுப்படுத்தும்’’ என்றார். பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவிலும் திருக்குறளைப் புகழ்ந்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலைப் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். படம்: பிடிஐ</p></div>
விஜய் முதலமைச்சர் ஆனதில் மகிழ்ச்சி: அஜித் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in