

டேராடூன்: டிஜிட்டல் கைது மோசடி மூலம் 70 வயது மூதாட்டியிடம் ரூ.3.09 கோடியை பறித்த கும்பல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு டேராடூடன் சைபர் போலீஸில் ஒரு புகாரைக் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சிபிஐ அதிகாரி என்றும், ரூ.68 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் எனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு இருப்பதாகவும், நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கில் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்றும், இந்த விவகாரத்தை யாரிடமாவது தெரிவித்தால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நபர் மிரட்டினார். எனவே, இந்த விஷயத்தில் உங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டுமானால், வங்கி விவரங்களை தர வேண்டும் என்றும், விசாரணை முடிந்ததும் உங்களது பணம் உங்களிடமே திரும்பி வந்து விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.09 கோடியை அவர்கள் எடுத்துவிட்டனர்.
அதன் பின்னரே இது மோசடி என்று எனக்குத் தெரிந்தது. என்னுடைய நிரந்தர வைப்பு, பங்குகளை விற்றது மூலம் கிடைத்த பணம், நகைகளை அடகு வைத்து பணத்தைக் கொடுத்தேன். ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும் நீங்கள் கைது செய்யப்படாமல் இருக்கவே இந்த பணம் என்று அவர்கள் நம்பிக்கை ஊட்டினர். இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டேராடூன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.