

புதுடெல்லி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 176-வது அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழங்கப்பட்டுள்ள சில முக்கியப் பரிந்துரைகள்: பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை்யை 3 நட்சத்திர ஓட்டல் கட்டணத்துடன் ஒப்பிட்டு நிர்ணயிப்பதுடன், அதனுடன் பயிற்சி மருத்துவர், செவிலியர், உணவு மற்றும் துப்புரவுச் செலவுகளை மட்டுமே கூடுதலாகச் சேர்க்க அனுமதிக்க வேண்டும்.
சிகிச்சை தொடங்கும்முன், நோயாளிகளுக்குச் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் முழு சிகிச்சைச் செலவு மதிப்பீட்டு அறிக்கையை மருத்துவமனைகள் கட்டாயம் வழங்க வேண்டும். நோயாளி தேர்வு செய்யும் அறையின் தரத்துக்கு ஏற்ப சிகிச்சைக் கட்டணத்தை உயர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து அறைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை் கட்டணமுறை வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தி்ல்் இணைக்கப்பட்டுள்ள தனியார், அரசு மருத்துவமனைகளிலும் ‘அம்ரித்’ மற்றும் ‘ஜன் அவுஷதி’ மலிவுவிலை மருந்தகங்களை அமைப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். புற்றுநோய், அரிதான நோய் சிகிச்சைகளுக்கு உதவ, கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி மற்றும் நன்கொடைகளை ஒருங்கிணைத்து தனி தேசிய, மாநில சுகாதார நிதியை உருவாக்க வேண்டும்.
இந்தியாவில் சராசரியாக ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குடும்பத்துக்கு ரூ.34,064 வரை செலவாகிறது என்றும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி 1,000 பேருக்கு 3.5 படுக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் இந்தியாவில் 1.3 படுக்கைகள் மட்டுமே உள்ளன. எனவே, கிராமப் புற சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.