

புதுடெல்லி: இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 14,488-பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 4.3 சதவீதம் அதிகம் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை சற்றே குறைந்திருந்தாலும், மாணவர்கள் உயிரிழப்பது அதிகரித்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2023-ல் 1,71,418-ஆக இருந்த நாட்டின் மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை, 2024-ல் 1,70,746-ஆக (0.4%) குறைந்துள்ளது. ஆனால், 2023-ல் 13,892-ஆக இருந்த மாணவர் தற்கொலை 2024-ல் 14,488-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் (2015-2024) மாணவர் தற்கொலை விகிதம் 62.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015-ல் 8,934-ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 14,488-ஐ எட்டியுள்ளது. மாணவர்கள் தற்கொலையில் மகாராஷ்டிரம் (13.2%) முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (10.9%), மத்தியப் பிரதேசம் (10%) மற்றும் தமிழ்நாடு (8.9%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கல்வித் தகுதியின் அடிப்படையில் பார்த்தால், 10-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களே அதிகளவில் (25.6%) தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 12-ம் வகுப்பு (18.3%) மற்றும் 8-ம் வகுப்பு (17.7%) பயின்ற மாணவர்கள் உள்ளனர். இவ்வாறு புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.