

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸுக்கு இடையே இடைவெளி காணப்படுகிறது. தொகுதிப் பங்கீடு முதல் தேர்தல் வாக்குறுதிகள் வரை இரு கட்சிகளுக்கும் இடையே சிக்கல் நீடித்து வருகிறது.
உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்காக வலுவானக் கூட்டணி அமைக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும், காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்களும் கூறி வருகின்றனர். கூட்டணிக் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டிற்கு பின்னரே தேர்தல் அறிக்கைகள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.
தேர்தல் குறித்த முக்கியமான அரசியல் அறிவிப்புகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை இருதரப்பும் சேர்ந்தே மேற்கொள்ளப்படுவதும் உண்டு. ஆனால், தொகுதிப் பங்கீடு குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே, சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையாக செயல்படத் துவங்கி உள்ளது.
அகிலேஷின் இந்த நடவடிக்கை, காங்கிரஸிற்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கும்போது, தேர்தல் வாக்குறுதிகள் போன்ற முக்கிய முடிவுகளில் ஏன் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை என்ற கேள்வி எழுகிறது.
சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டுமே தங்கள் தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்து வைத்துள்ளன. இதில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலானர்கள் மற்றும் மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்த தெளிவான சூழல் உருவாகும் வரை சமாஜ்வாதி கட்சியால் காத்திருக்க முடியவில்லை. அதனால், அதன் தலைவர் ஆகிலேஷ், அவ்வப்போது தேர்தல் வாக்குறுதி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதேநேரத்தில், இரு கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என காங்கிரஸ் காத்திருக்கிறது. எனினும், இரு தரப்புக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது.
காங்கிரஸிற்கு 120 தொகுதிகள் வரை சமாஜ்வாதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸுக்கு வெறும் 26 இடங்களை மட்டுமே வழங்க சமாஜ்வாதி முன்வந்தது.
இது, காங்கிரஸ் தரப்பில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்பியான இம்ரான் மசூத், ’நாங்கள் 26 இடங்களுக்காக யாசகம் கேட்க விரும்பவில்லை’ என விமர்சித்தார்.
இருப்பினும், காங்கிரஸின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உ.பி. தலைவார்களான ஆராதனா மிஷ்ரா மற்றும் அஜய் ராய் போன்றவர்கள், எப்படியாவது கூட்டணி அமைய வேண்டும் என விரும்புகின்றனர்.
ஏனெனில், கடந்த மக்களவைத் தேர்தலில் அமைந்த இந்த கூட்டணிக்கு நல்ல பலன் கிடைத்திருந்தது. இதனால், பகிரங்க மோதலைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், சமாஜ்வாதி உ.பி.-யில் முஸ்லிம் வாக்குகள் அதிகம் உள்ள ஐந்து தொகுதிகளில் வேட்பளர்களை அறிவித்து விட்டது. எனவே, இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே வேட்பாளர் அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு, தனித்தனி தேர்தல் வாக்குறுதிகள் என அனைத்தும், கூட்டணிக்கு சவாலாகி விட்டன.