

புதுடெல்லி: டெல்லியில் இந்தியக் கடற்படை ஓய்வுபெற்ற அதிகாரியின் வங்கிக் கணக்கிலிருந்து, அவரது 22 வயது பேரனும் நண்பரும் சேர்ந்து ரூ.29.50 லட்சத்தை மோசடி செய்து சுற்றுலா மற்றும் பார்ட்டிகளுக்காக செலவழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஜெகதீஷ் சிங்(87). இவரது மகன் அஸ்வனி ராகவ், தனது தந்தையின் வங்கிக் கணக்கில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை் சந்தேகத்திற்குரிய வகையில் பணம் எடுக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், புகார்தாரரின் மகனும் ஜெகதீஷ் சிங்கின் பேரனுமான அபிஷேக் ராகவ் (22) மற்றும் அவரது நண்பர் துஷார் சவுத்ரி (22) ஆகியோர் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
முதியவர் ஜெகதீஷ் சிங்கின் வங்கிக் கணக்குடன் பேரன் அபிஷேக்கின் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தது. இதைத்தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அபிஷேக், தனது தாத்தாவின் வங்கி விவரங்களைப் பயன்படுத்தி நண்பர் துஷாருடன் சேர்ந்து மொத்தம் ரூ.29.50 லட்சத்தை சுருட்டியுள்ளார். மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.9.26 லட்சம் அபிஷேக்கின் வங்கிக் கணக்குக்கும், மீதமுள்ள ரூ.20.24 லட்சம் துஷாரின் வங்கிக் கணக்குக்கும் மாற்றப்பட்டுள்ளது. திருடிய பணத்தைக் கொண்டு இருவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
மணாலி, நைனிடால் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துச் செலவழித்துள்ளனர். மேலும், ரூ.2.75 லட்சத்துக்கு ஒரு கார் வாங்கியதோடு, அதில் இசைக் கருவிகளைப் பொருத்துவதற்காக மட்டும் கூடுதலாக ரூ.1.25 லட்சம் செலவிட்டுள்ளனர்.
வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த காவல் துறையினர், உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹரில் பதுங்கியிருந்த அபிஷேக் ராகவ் மற்றும் துஷார் சவுத்ரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 மொபைல் போன்கள் மற்றும் மோசடிப் பணத்தில் வாங்கப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களில் அபிஷேக் சட்டப் படிப்பும், துஷார் நர்சிங் படிப்பும் படித்து வருகின்றனர். மீதமுள்ள பணத்தை மீட்கவும், இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என விசாரிக்கவும் இருவரையும் போலீஸர் காவலில் எடுத்துள்ளனர்.