

அமராவதி: ஆந்திராவின் ஒரே தலைநகரமாக அமராவதிக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் மாநில சட்டப்பேரவையில் நேற்று நிறைவேறியது.
ஆந்திர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று அமராவதியில் நடைபெற்றது. இதில், ஆந்திராவின் ஒரே தலைநகரமாக அமராவதிக்கு சட்டப்பூர்வப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “2014-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலமே, ஒரே தலைநகரமாக அமராவதிக்கு நிரந்தர சட்டப் பாதுகாப்புப் பெற முடியும்’’ என்றார்.
இந்த தீர்மானத்துக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அய்யண்ண பாத்ருடு அறிவித்தார். விரைவில் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தீர்மானத்தின் பின்னணி: ஆந்திர பிரதேசம் கடந்த 2014-ல் 2 ஆக பிரிக்கப்பட்டது. இதன்படி, தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் தலைநகராக ஹைதராபாத் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆந்திராவில் ஆட்சி அமைத்த சந்திரபாபு நாயுடு, அமராவதி தலைநகர திட்டத்தை தொடங்கினார். இதற்காக நிலங்கள் கையகப்படுத்தி, கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. எனினும் 2019-ல் ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி இதை ஏற்காமல் 3 தலைநகர திட்டத்தை அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து 2024-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு, அமராவதி மட்டுமே ஆந்திராவின் தலைநகரமாக இருக்கும் என அறிவித்தார். இதன் அடிப்படையில் இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளார்.