

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நோட்டீஸில் 193 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் நேற்று முன்தினம் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இந்த நோட்டீஸில் 130 மக்களவை எம்பிக்கள், 63 மாநிலங்களவை எம்.பிக்கள் என மொத்தம் 193 பேர் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று சமர்ப்பிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஒரு தலைப்பட்சமாக செயல்படுவது அல்லது திறனற்ற செயல்பாடு ஆகிய இரு காரணங்களுக்காக தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதை அடிப்படையாக வைத்து அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.
இந்த நோட்டீஸை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 100 எம்பிக்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதேபோல மாநிலங்களவைத் தலைவரிடம் நோட்டீஸை சமர்ப்பிக்க 50 எம்பிக்கள் நோட்டீஸில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
இரு அவைகளிலும் நோட்டீஸ் ஏற்கப்பட்டால் உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த சட்ட நிபுணர் அடங்கிய 3 நபர் குழு அமைக்கப்படும். இந்த குழு அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தும். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக சிறப்புக் குழு கருதினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை.