

விசாகப்பட்டினம்: ஒரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவுக்குள் மற்றொரு விமான நிலையத்தை அமைக்கக்கூடாது என்ற விதி மிக நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதியில் தற்போது தளர்வு செய்யப்பட்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. இந்த விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு சுமார் 72 கி.மீ. தொலைவில் நொய்டாவின் ஜேவரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு விசாகப்பட்டினத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியாதவது:
விமான பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு 150 கி.மீ. தொலைவு விதியில் தளர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு மாநிலங்களின் பெருநகரங்களில் 2-வது விமான நிலையம் கட்டப்பட உள்ளது. 150 கி.மீ. விதியில் தளர்வு செய்யப்பட்டு நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையம் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் திறக்கப்படும்.
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகாபுரத்தில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையம் மே அல்லது ஜூன் மாதம் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.