

ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘ஜனநாயகன்’. விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள கடைசிப் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்படும் அதிகமான பங்குத் தொகையே காரணம் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், “ஜனநாயகன் படத்துக்கு 60 சதவீதம் திரையரங்குகளும், ‘பராசக்தி’ படத்துக்கு 40 சதவீதம் திரையரங்குகளும் ஒதுக்குவதாக இருந்தது. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு 75 முதல் 80 சதவீதம் வரை பங்குத் தொகை கேட்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி திரையரங்குகள் நடத்தி சம்பளம் கொடுப்பது?
70 சதவீதம் வரை பங்குத் தொகை கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால், 75 சதவீதம் வரை கேட்கிறார்கள். திருநெல்வேலியில் 80 சதவீதம் பங்குத் தொகை வேண்டும் என்கிறார்கள். திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது.
கேரளாவில் 60 சதவீத பங்குத் தொகைக்குதான் ‘ஜனநாயகன்’ திரையிட உள்ளார்கள். பாலக்காட்டில் 60 சதவீதம் பங்குத் தொகை, கோயம்புத்தூரில் 75 சதவீதம் பங்குத் தொகை என்கிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு பிரச்சினை. ‘கோட்’ படத்துக்கும் இதே 75 சதவீத பங்குத் தொகை. பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் வரை போராடி பார்த்தோம். ஆனால், ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானதால் வேறு வழியின்றி கொடுத்துவிட்டோம்.
உடனே இதுக்கு அரசியல் காரணம் இருக்கும் என்கிறார்கள். எங்களுக்கு எந்தவொரு மேலிடத்தில் இருந்தும் அழுத்தமில்லை. நியாயமான பங்குத் தொகை கேட்டால் உடனடியாக திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கும். இதனால் சில திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தினை போட்டுவிட்டார்கள். ’பராசக்தி’ படத்துக்கு மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு 50 சதவீதமும், ஒற்றை திரையரங்குகளுக்கு 60 முதல் 65 சதவீதம்தான்.
‘ஜனநாயகன்’ படத்துக்கு மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு 60 சதவீதமும், ஒற்றை திரையரங்குகளுக்கு 75 முதல் 80 சதவீதம் வரை கேட்கிறார்கள். இதனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு திரையரங்குகள் அதிகமாக கிடைப்பதில் சிரமம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.