

புதுடெல்லி: தீவிரவாத தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் நாடு முழுவதிலும் தேசிய பாதுகாப்பு படைகளின் தயார்நிலை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் நவம்பர் 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புக்கு பிறகு இது மிகவும் அவசியமாகி விட்டது.
அந்த வகையில் உ.பி.யில் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசியில் 'ஆபரேஷன் கங்கா கார்டு' எனும் பெயரில் நீர்வழித் தாக்குதல் தடுப்பு ஒத்திகை பயிற்சி கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி), தேசியப் பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்), இந்திய விமானப் படை (ஐஏஎப்), இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (ஐடபுள்யுஏ) ஆகிவற்றுடன் உ.பி. காவல்துறை இணைந்து வாராணசியின் ரவிதாஸ் காட் பகுதியில் இதனை நடத்தியது.
சுற்றுலா கப்பலில் உள்ள பயணிகள் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்டால் அதை முறியடித்து பயணிகளை மீட்பது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்த ஒத்திகையில் உ.பி. காவல்துறை சார்பில் வாராணசி துணை ஆணையர் டி.சரவணன் முக்கியப் பங்காற்றினார்.
இந்து தமிழ் திசை நாளேட்டிடம் அவர் கூறுகையில், ‘‘இந்தப் பயிற்சி வளர்ந்து வரும் நதி சார்ந்த சுற்றுலாவை பாதுகாப்பதற்கும் நீர்வழிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பயன்படும். முக்கியமாக தீவிரவாதிகளின் நீர்வழித் தாக்குதலை சமாளிக்கும் வகையில் நமது பாதுகாப்பு படைகளின் முறையானப் பயிற்சியும் இதில் சோதிக்கப்பட்டது.
இத்தகைய பயிற்சி பல்வேறு பாதுகாப்புப் படையினர் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் உடனடி எதிர்தாக்குதல் திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது. டெல்லி கார் குண்டு வெடிப்புக்கு பிறகு வாராணாசியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது’’
காசி எனும் வாராணசியில் பழம்பெரும் புனிதத்தலமான காசி விஸ்வநாதர் கோயில், சங்கட மோர்ச்சன் கோயில், காலபைரவர் கோயில், காசி விசாலாட்சி கோயில் என பல ஆலயங்கள் உள்ளன. வாராணசியில் இதுவரை தீவிரவாதிகளின் மூன்று தாக்குதல்களில் சுமார் 70 பேர் இறந்துள்ளனர்.