

பெங்களூரு: பெங்களூருவில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வேனில் ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தனிப்படை போலீஸ்காரர் உட்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 6.29 கோடியை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஜேபி நகர் எச்டிஎஃப்சி வங்கிக் கிளையில் இருந்து ஏடிஎம்களில் பணம் நிரப்பும் சிஎம்எஸ் நிறுவன வேன் ஜெயநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அசோகா தூண் அருகே சென்றபோது ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல சிலர் நடித்து, 4 பெட்டிகளில் இருந்த ரூ.7.11 கோடியை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சித்தாபுரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 8 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்டமாக தனிப்படை போலீஸார், 30 பேரிடம் விசாரித்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 3 பேரை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்த கொள்ளை வழக்கில் முதல்கட்டமாக ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தின் பாதுகாவலராக பணியாற்றிய கோவிந்தராஜபுரா போலீஸ் நிலைய கான்ஸ்டபிள் அன்னப்பா, சிஎம்எஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி கோபால் பிரசாத், முன்னாள் ஊழியர் சேவியர் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம். இவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர். இவர்களிடம் இருந்து ரூ.6.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட இன்னோவா காரை ஆந்திராவில் பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் ஹைதராபாத்தில் கர்நாடக தனிப்படை போலீஸார் 3 பேரை கைது செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தை அன்னப்பா, கோபால் பிரசாத், சேவியர் ஆகிய மூவரும் 3 மாதங்கள் திட்டமிட்டு செய்துள்ளனர். கடந்த 15 நாட்களாக பணத்தை எப்படி கொள்ளையடிப்பது என ஒத்திகை பார்த்துள்ளனர். ஜே.பி.நகரில் இருந்து ஜெயநகர் வரை சிசிடிவி கேமரா இல்லாத இடங்களை தேர்வு செய்து, கச்சிதமாக கொள்ளையடித்துள்ளனர்.
இந்த சதி திட்டத்தில் தொடர்புடைய அனைவரும் வாட்ஸ் அப் மூலம் ஒருவர் மற்றவரிடம் பேசியுள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று 3 பேரின் செல்போன் எண்களும் குறிப்பிட்ட செல்போன் டவரில் இருந்துள்ளன. இவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற குற்றவாளிகளின் செல்போன் எண்களை கொண்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இந்த வழக்கில் 200க்கும் மேற்பட்ட தனிப்படை போலீஸார் கர்நாடகா மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்களின் கடுமையான விசாரணையின் காரணமாகவே 54 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து, பணத்தையும் பறிமுதல் செய்ய முடிந்தது” என்றார்.