

புதுடெல்லி/பெங்களூரு: டெல்லியில் நேற்றுமுன்தினம் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது.
அப்போது கடந்த ஒரு மாதத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழைப்பொழிவின் அளவு, அணைகளின் நீர் இருப்பு, உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவில் குறிப்பிட்டுள்ள திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசின் தரப்பில், கடந்த இரு மாதங்களாக நிலுவையில் உள்ள 13 டிஎம்சி நீரை திறக்கவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபரில் திறக்க வேண்டிய நீரையும் சேர்த்து திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கர்நாடக அரசு அதிகாரிகள், அணைகளில் குறைந்த அளவிலே நீர் இருப்பதால், தமிழகத்துக்கு நீரை திறக்க முடியாது என தெரிவித்தனர்.
இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா, “அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக அரசு, தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும்” என, பரிந்துரை செய்தார்.
இதை ஏற்க முடியாது என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.