நிஜ உலக ‘பேட்மேன்’ ராகுல் காந்தி: டெல்லி காங்கிரஸ் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரல்

நிஜ உலக ‘பேட்மேன்’ ராகுல் காந்தி: டெல்லி காங்கிரஸ் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரல்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான இந்திரா பவன் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் அலுவலகப் பகுதிகளில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘நிஜ உலக பேட்மேன்’ என சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

டெல்லி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்களில், ராகுல் காந்தியின் படத்துடன் அமெரிக்க சூப்பர்ஹீரோவான பேட்மேனின் உருவமும் இடம்பெற்றுள்ளது. மேலும், ‘தி சைலன்ட் கார்டியன்’ என்றும் ‘எ வாட்ச்புல் புரொட்டெக்டர்’ போன்ற வாசகங்களும் அதில் அச்சிடப்பட்டுள்ளன.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இளைஞர்களுடன் 'Ask Me Anything' என்ற கலந்துரையாடல் நிகழ்வை ராகுல் காந்தி நடத்தினார். அதில் பங்கேற்ற பயனர் ஒருவர், "நீங்கள் பேட்மேனா?" என்ற கேள்வியை எழுப்பினார். அதற்குப் நகைச்சுவையாகப் பதிலளித்த ராகுல் காந்தி, "என்னையும் பேட்மேனையும் இதுவரை ஒரே அறையில் யாரும் ஒன்றாகப் பார்த்ததில்லை என்று மட்டும் வைத்துக்கொள்வோம்" எனப் நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.

இந்த பதிலை அடிப்படையாகக் கொண்டு, காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ பக்கங்களில் ‘தி டார்க் நைட்’ திரைப்படத்தின் பின்னணி இசையுடன் வீடியோக்களைப் பகிர்ந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தலைநகரில் போஸ்டர்களாகவே ஒட்டப்பட்டுள்ளது. ஜென்ஸீ தலைமுறையினரைக் கவரும் வகையிலான புதிய பிரச்சார உத்தியை காங்கிரஸ் சமீபநாட்களாக கையில் எடுத்து வருவது கவனிக்கத்தக்கது. 

நிஜ உலக ‘பேட்மேன்’ ராகுல் காந்தி: டெல்லி காங்கிரஸ் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரல்
“ராகுலின் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியால் பாஜக நிலைகுலைந்து விட்டது”: காங். விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in