

போபால்: மத்திய இணையமைச்சராக பதவி வகித்து வந்த எல்.முருகன், கடந்த அக்டோபர் 13-ம் தேதி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்பி. பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி.யாக பதவிவகித்து வந்த எல்.முருகனின் பதவிக் காலம், 2030-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வரை இருந்த நிலையில் அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
இதனால் காலியான மாநிலங்களவை எம்பி. பதவிக்கு நவம்பர் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரைத் தவிர ராஜ்குமார் லோஹானி, கண்டே சயன்னா ஆகிய இரு சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வேட்புமனு பரிசீலனையின்போது, இரு சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து புரியின் வேட்பு மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர் போட்டியின்றி தேர்வானார். இந்நிலையில், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நேற்று பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்ததை அடுத்து, புரியின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.