

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவருமான சோனியா காந்தி ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்கிற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் குறித்து தனது பிள்ளைகளான ராகுல் (மக்களவை எதிர்க்கட்சி தலைவர்) மற்றும் பிரியங்கா (காங்கிரஸ் பொதுச் செயலாளர்) உடன் சோனியா காந்தி கலந்துரையாடினார். இது தொடர்பான வீடியோவை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில் சோனியா கூறியதாவது: நான் ‘பிலாங்கிங்’ புத்தகத்தை என் நினைவுகளிலிருந்து எழுதினேன். ராகுலும் பிரியங்காவும் தங்களது சொந்த நினைவுகளைச் சேர்த்து, அதற்கு ஒரு புதிய உயிரூட்டத்தை அளித்தனர்.
என் பிள்ளைகள்தான் என் மிகப்பெரிய மகிழ்ச்சி, என் மிகப்பெரிய பலம். தனது தந்தையின் பாதுகாப்பு குறித்து முன்பே அச்சத்தை வெளிப்படுத்திய ராகுல், “அம்மா, நாம் அப்பாவின் பாதுகாப்புக்காக ஏதாவது செய்யவில்லை என்றால், நான் மிக விரைவில் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியும்” என்று என்னிடம் கூறினார்.
மேலும், “அப்பா கொல்லப்பட வேண்டும் என்பதற்காக அவரது பாதுகாப்பு அகற்றப்பட்டது” என்றும் கூறினார். அவர் சொன்னதுபோல ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. அது மிகத் தெளிவான திட்டமிட்ட செயல். இவ்வாறு சோனியா பேசினார்.
இது தொடர்பாக ராகுல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நானும் பிரியங்காவும் எங்கள் தாயாருடன் அமர்ந்து அந்த நினைவுகளைத் திரும்பிப் பார்த்தபோது, அப்போது நாங்கள் உணர்ந்த மகிழ்ச்சி, சிரிப்பு, ஏன் வலி கூட மீண்டும் வந்தது. அம்மாவின் ‘பிலாங்கிங்’ என்ற பயணம் அளவற்ற அன்பும் கொடிய துயரமும் நிறைந்ததாக இருந்திருக்கிறது. மேலும் அவர் அனைத்தையும் கண்ணியத்துடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தில் எனது தாய் சில விவரங்களை விட்டுவிட்டார். எனது தந்தையின் பாதுகாப்பைத் திரும்பப் பெற்றதற்குப் பின்னால் ஒரு உள்நோக்கம் இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
1989 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து, பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான புதிய அரசு 1990-ல் ராஜீவ் காந்தியின் எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற்றது. அதன் பிறகு 1991-ல் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டு வெடிப்பில் ராஜீவ் கொல்லப்பட்டார்.
வீர் சாவர்க்கர் கொள்ளு பேரன் நோட்டீஸ்
சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவர்க்கர் சோனியாவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: சோனியா எழுதியுள்ள புத்தகத்தின் 201-வது பக்கத்தில், “காங்கிரஸ் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் தாக்குதல்களையும், சிறைவாசத்தையும் எதிர்கொண்டபோது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த சித்தாந்தவாதிகளான சாவர்க்கர் போன்றோர் தங்களது காலனிய ஆட்சியாளர்களிடம் கருணை மனுக்களை எழுதிக் கொண்டிருந்தனர்.
மேலும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பவர்களாகச் செயல்பட்டனர்” என குறிப்பிட்டுள்ளார். இது அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் போராட்டம் குறித்த முழுமையற்ற, திரிக்கப்பட்ட சித்திரத்தை அளிப்பதாக உள்ளது. மேலும் புத்தகத்தின் 201 மற்றும் 443-வது பக்கங்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள் சாவர்க்கரின் வரலாறு குறித்து எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். எனவே, தனது கருத்துகளுக்கு நம்பகமான வரலாற்று ஆதாரங்களை சோனியா சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.