ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அபார வெற்றி, காங்கிரஸ் பின்னடைவு

ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அபார வெற்றி, காங்கிரஸ் பின்னடைவு
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளுங்கட்சியான பாஜக குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது முந்தைய இடத்தை இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது.

2019-2021 காலகட்டத்தில் நடைபெற்ற முந்தைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை தொகுதி மறுவரையறை காரணமாக வார்டுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டது. முந்தைய தேர்தலில் 7,474 ஆக இருந்த மொத்த வார்டுகளின் எண்ணிக்கை, இம்முறை 37.1% அதிகரிக்கப்பட்டு 10,244 ஆக உயர்ந்தது. மொத்த வார்டுகள் விரிவுபடுத்தப்பட்ட போதிலும், பாஜக பெற்ற வெற்றிகளின் விகிதம் அதைவிட வேகமாக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 10,244 வார்டுகளில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி பாஜக 4,179 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை 2,666 வார்டுகளைக் (35.7%) கைப்பற்றியிருந்த பாஜக, இம்முறை தனது எண்ணிக்கையை 56.8% உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மொத்த வார்டு பங்களிப்பில் பாஜக 40.8%-ஐப் பெற்று, சுமார் 5.1 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.

காங்கிரஸ் 3,613 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. முந்தைய தேர்தலில் 3,042 வார்டுகளைக் (40.7%) கைப்பற்றி முதலிடத்தில் இருந்த காங்கிரஸ், இம்முறை தனது எண்ணிக்கையில் 18.7% மட்டுமே வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் காரணமாக, மொத்த வார்டு பங்களிப்பில் காங்கிரஸ் 35.3%-ஆகக் குறைந்து, சுமார் 5.4 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

சுயேச்சைகள் 2,273 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை 1,672 வார்டுகளைப் பெற்றிருந்த சுயேச்சைகள், இம்முறையும் தனது 22.2% பங்களிப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர். பிற கட்சிகளில், ஹனுமான் பெனிவாலின் ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக் கட்சி 14-லிருந்து 63 வார்டுகளாகப் (350% உயர்வு) பலத்தைப் பெருக்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8-லிருந்து 38 வார்டுகளாகப் பலமடைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 24-லிருந்து 19 வார்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அபார வெற்றி, காங்கிரஸ் பின்னடைவு
‘தலைமைப் பண்பு’ குறித்து விஜய் சேதுபதி பேசிய விவகாரம்: விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் | Bigg Boss Tamil 10

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in