‘தலைமைப் பண்பு’ குறித்து விஜய் சேதுபதி பேசிய விவகாரம்: விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் | Bigg Boss Tamil 10

‘தலைமைப் பண்பு’ குறித்து விஜய் சேதுபதி பேசிய விவகாரம்: விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் | Bigg Boss Tamil 10
Updated on
1 min read

சென்னை: ‘பிக்பாஸ் 10’ நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய விவகாரம் சர்ச்சையானதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் வார இறுதி எபிசோடில், போட்டியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் 'ஜனநாயக அறை' குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி விவாதித்தார்.

அப்போது வீட்டின் தலைவராக இருந்த ஷாத்திகா என்ற போட்டியாளரின் செயல்பாட்டை விமர்சித்து பேசிய அவர், “உண்மையான தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், பின்னர் சவால்களும் பொறுப்புகளும் உருவாகும்போது எதிர் அணி மீது பழியைப் போட்டுவிட்டுக் களத்தை விட்டுத் தெறித்து ஓடுவதும் ஒரு தலைவனுக்கு அழகல்ல. அதெல்லாம் ஏமாற்று வேலை" என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து விஜய் சேதுபதியின் பேச்சு மறைமுகமாக முதல்வர் விஜய்யை குறிப்பிடுவதாக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்களும், முதல்வர் விஜய்யின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேரடியாக விஜய் சேதுபதியை டேக் செய்து கடுமையாக சாடியும், மீம்களை உருவாக்கியும் விமர்சித்து வருகின்றனர். 

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியதைத் தொடர்ந்து, விஜய் டிவி நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: “பிக்பாஸ் தமிழ் சீசன் 10 என்பது அதன் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்பு, கருப்பொருள்கள் மற்றும் விளையாட்டுச் சூழலுக்குள் வழங்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், உணர்வுகள் மற்றும் எதிர்வினைகள் அனைத்தும் நிகழ்ச்சியின் வளர்ந்து வரும் கதையோட்டத்தின் ஒரு பகுதியாகும். அவை நிகழ்ச்சிக்குள்ளேயே நிகழும் சூழலின் பின்னணியிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தவொரு குறிப்போ அல்லது வெளிப்பாடோ, நிகழ்ச்சிக்கு வெளியேயுள்ள எந்தவொரு நபர், அமைப்பு, நிறுவனம், சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைக் குறிப்பதாகவோ, ஆதரிப்பதாகவோ அல்லது கருத்து தெரிவிப்பதாகவோ கருதப்படக்கூடாது. இந்நிகழ்ச்சி மற்றும் இதன் உத்தேசிக்கப்பட்ட பொழுதுபோக்குச் சூழலைத் தாண்டிச் செய்யப்படும் எந்தவொரு விளக்கமோ அல்லது தொடர்புகளோ எந்தவொரு உள்நோக்கமோ அல்லது அதற்கு ஆதரவானதோ அல்ல” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘தலைமைப் பண்பு’ குறித்து விஜய் சேதுபதி பேசிய விவகாரம்: விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் | Bigg Boss Tamil 10
‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ டீசர் எப்படி? - தெய்வீகமும் பிரம்மாண்டமும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in