

புதுடெல்லி: நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் குடிநீரின் தரத்தை உடனடியாக மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் தொடர் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் ரயில்வேயின் குடிநீர் தரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இணைந்து இது தொடர்பாக ஒரு நாள் முழு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, பயணிகள் பயன்பாட்டுக்கான குடிநீர் விநியோகத்தில் உடனடியாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உத்தரவிடப்பட்டது.
இதன் முதற்கட்டமாக, ரயில்வே நெட்வொர்க் முழுவதும் உள்ள வாட்டர் கூலர்கள் உட்பட 20,000 இடங்களில் புதிய ‘டேங்க் டு டாப்’ குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்படவுள்ளன. மேலும், தேவைப்படும் இடங்களில் பழைய நீர் தேக்கத் தொட்டிகளை அகற்றிவிட்டு புதிய தொட்டிகளை அமைக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.
குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விநியோகப் புள்ளிகள் ஆகிய இரண்டிலும் வழக்கமான நீர் தரப் பரிசோதனைகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அளவிலான கண்காணிப்பு, தொட்டிகளைத் திட்டமிட்டுப் பராமரித்தல் மற்றும் சுத்தம் செய்தல் ஆகியவற்றுடன், சீரான இடைவெளியில் குடிநீர் தர அறிக்கைகளை வெளியிட்டு வெளிப்படைத்தன்மையைப் பேணவும் ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.