

புதுடெல்லி: மூன்று புல்லட் ரயில் வழித் தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மார்ச் 2027-க்குள் முடிக்க ரயில்வே அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதில் ஹைதராபாத்- சென்னை, ஹைதராபாத்- பெங்களூரு மற்றும் பாட்னா- சிலிகுரி ஆகிய வழித்தடங்கள் அடங்கும். பாட்னா- சிலிகுரி புல்லட் ரயில் வழித் தடமானது வாராணசி- சிலிகுரி அதிவேக ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டங்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் 2026- 27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத்- சென்னை, ஹைதராபாத்- பெங்களூரு மற்றும் பாட்னா- சிலிகுரி அதிவேக ரயில் வழித் தடங்களுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணி செப்டம்பர் 2026 முதல் மார்ச் 2027-க்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி, திட்ட அனுமதி மற்றும் ஒப்புதலுக்குப் பிறகு பணிகள் தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், மும்பை- புனே, புனே- ஹைதராபாத், சென்னை- பெங்களூரு, டெல்லி- வாராணசி மற்றும் வாராணசி-சிலிகுரி உள்ளிட்ட 7 புதிய அதிவேக ரயில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தும் பொறுப்பை தேசிய அதிவேக ரயில் கழகத்திடம் ரயில்வே வாரியம் ஒப்படைத்தது.
ஒவ்வொரு புல்லட் ரயில் திட்டத்துக்கும் பிரத்யேகக் குழுக்களை உருவாக்கவும், தலைமையகங்களை நிறுவவும், கட்டுமானத்துக்கு முந்தைய பணிகளின் பட்டியலைத் தயார் செய்யவும் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஹைதராபாத் - சென்னை பயண நேரம் 2 மணி 55 நிமிடங்களாகக் குறையும். ஹைதராபாத் - பெங்களூரு இடையிலான பயண நேரம் வெறும் 1 மணி 13 நிமிடங்களாகக் குறையும். வாராணசி - பாட்னா - சிலிகுரி இடையிலான பயண நேரம் சுமார் 2 மணி 55 நிமிடங்களாகக் குறையும்.