

புதுடெல்லி: ரயில்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நடவடிக்கையாக பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்டுகளை அணைத்து வைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தென்கிழக்கு ரயில்வேயில் நள்ளிரவு நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளின் மின் இணைப்பு அணைக்கப்படாமல் இருந்ததால், பயணி ஒருவர் சார்ஜ் போட்டுக் கொண்டிருந்த பவர் பேங்க் வெடித்து புகை மூட்டம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 26 அன்று ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை எந்தவித விதிவிலக்கும் இன்றி சார்ஜிங் பாயிண்டுகள் அணைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஊழியர்கள் இதைச் சரியாகப் பின் பற்றுகிறார்களா என்பதை அறிய அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மட்டத்தில் திடீர் சோதனை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் கவனிக்கப்படாத மொபைல் போன்கள், பவர் பேங்க்குகள் சூடாகி வெடிப்பதன் மூலம் தீ விபத்து ஏற்படுவது மட்டுமின்றி, பயணிகள் தூங்கும் நேரத்தில் மொபைல் போன்கள் திருடப்படுவதையும் தடுக்க இந்த நடைமுறை உதவும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏசி மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் அறியும் வகையில், இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட் செயல்படாது என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.