

புதுடெல்லி: வணிக சிலிண்டரைத் தொடர்ந்து அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பணவீக்கத்தின் தாக்கம் தேர்தல்களுக்குப் பின்னரே உணரப்படும் என்று நான் முன்பே கூறியிருந்தேன்.
அதன்படி இன்று, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவே. இதுதான் தேர்தலுக்கான விலை.
பிப்ரவரி முதல் இதுவரை ரூ.1,380 அதிகரித்துள்ளது. வெறும் 3 மாதங்களில் 81% என்பது மிகப்பெரிய விலை உயர்வு. தேநீர் கடைகள், தாபாக்கள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் என அனைவரின் சமையலறையின் மீதும் சுமை அதிகரித்துள்ளது.
இதன் தாக்கம் உங்கள் உணவுத் தட்டின் மீதும் (உணவு விலையிலும்) எதிரொலிக்கும். முதலில் சிலிண்டர் விலையை ஏற்றியுள்ளனர். பிறகு பெட்ரோல்-டீசல் விலையையும் உயர்த்துவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்