ஓலா, ஊபர், ஜொமோட்டோ உள்ளிட்ட செயலி மூலம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள் தொடங்கினார் ராகுல்

ஓலா, ஊபர், ஜொமோட்டோ உள்ளிட்ட செயலி மூலம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள் தொடங்கினார் ராகுல்
Updated on: 
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலிகள் மூலம் பணியாற்றும் ‘கிக்’ தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

ஹைதராபாத்தில் 3 நாட்கள் நடைபெற்று வந்த பாரத் மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னதாக, ஹைதராபாத்தில் ரேபிடோ, ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஜொமோட்டோ உள்ளிட்ட செயலிகள் மூலம் பணியாற்றும் ‘கிக்’ தொழிலாளர்களின் பைக் பேரணி நேற்று நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ராகுல் காந்தி பெண் தொழிலாளி ஒருவரின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து பேரணியில் கலந்து கொண்டார். அதன் பின்னர், ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், செயலி தொழிலாளர்களுக்கென தனி வாரியம், பாதுகாப்பு சட்டங்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: செயலி தொழிலாளர்களின் கஷ்ட, நஷ்டங்களை நான் நேரில் கேட்டறிந்தேன். அவர்களுக்கு நலத் திட்டங்களை அமல்படுத்த காங்கிரஸ் அரசு தயாராக உள்ளது. அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரை விபத்துக் காப்பீடு, ரூ.10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு உட்பட மாத பென்ஷன் திட்டத்தையும் அமல்படுத்தி உள்ளோம். இது ஹைதராபாத்தில் மட்டுமல்லாது தெலங்கானா மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

செயலி மூலம் பணியாற்றும் ‘கிக்’ பணியாளர்களின் முழு விவரங்கள் கிடைக்காது என கூறினார்கள். ஆனால், தெலங்கானாவில் இவர்களின் முழு விவரங்களையும் நாங்கள் எடுத்துள்ளோம். இது தெலங்கானா அரசிடம் உள்ளது. செயலி தொழிலாளர்களுக்காக தெலங்கானாவில் இலவச நெட் வசதியுடன் தெலங்கானா முழுவதும் இவர்களுக்காக ஓய்வறைகள் கட்டப்படும்.

ஆனால், பிரதமர் மோடிக்கு அம்பானி, அதானி போன்றவர்களுக்கு உதவி செய்யவே தெரியும். தொழிலாளர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகள் செய்ய மனம் வராது. ஆனால், எனக்கு மக்கள் பிரச்சினைகளை அறிந்து, அதற்கு தீர்வு காணவும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

ஓலா, ஊபர், ஜொமோட்டோ உள்ளிட்ட செயலி மூலம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள் தொடங்கினார் ராகுல்
இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தகவல்

X