

புதுடெல்லி: பிஹார் காங்கிரஸ் தலைவர்களை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி நேற்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு சென்றார். அங்கு பிஹார் மாநில காங்கிரஸ் தலைவர்களை ராகுலும் கார்கேவும் சந்தித்து பேசினர். பிஹார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.
சமீபத்திய பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில், மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.
பிஹார் தோல்விக்கான காரணங்களை அறிய, அம்மாநில தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை ராகுல், கார்கே ஆகிய இருவரும் ஏற்கெனவே இந்திரா பவனில் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது, “பிஹாரில் பெண்களுக்கு அரசு வழங்கிய ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை, பிஹார் காங்கிரஸுக்குள் நிலவும் உட்கட்சி பூசல்கள், கட்சி வேட்பாளர்களை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவற்றை வேட்பாளர்கள் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.